Thiru. V. Kalyanasundaram
நாயன்மார் வரலாறு என்னும் இந்நூலுக்கு முதல் நூல் திருத் தொண்டத்தொகை; வழி நூல் திருவந்தாதி; சார்புநூல் பெரிய புராணம். இம்மூன்றும் முறையே வன்தொண்டராலும், நம்பி யாண்டார் நம்பியாலும், சேக்கிழாராலும் அருளிச்செய்யப் பெற்றன.திருத்தொண்டர் புராணசாரமென்பது பின்னே உமாபதி சிவாசாரியரால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது.நாயன்மார் வரலாற்றின் வரலாறு, எனது ஆராய்ச்சிக் குறிப்புரையைக் கொண்ட பெரியபுராணம் இரண்டாம் பதிப்பின் முன்னுரைக்கண் விளக்கப்பெற்றிருக்கிறது. அப்பகுதி வருமாறு:-'சென்னை வெஸ்லி கலாசாலையில் யான் மாணாக்கனா யிருந்த போது, யாழ்ப்பாணம் - நா. கதிரைவேற் பிள்ளை யவர்களது அன்புக்கு உரியவனானேன். ஆங்கிலத்தில் பித்துக்கொண்டு திரிந்த எனக்குத் தமிழில் வேட்கையை எழுப்பியவர் அவரேயாவர். அவரிடம் யான் நெருங்கிப் பழகி வந்தபோது, பெரியபுராணத்தைப் படிக்குமாறும், நாயன்மார் வரலாறுகளை உரை நடையில் எழுதி எழுதிப் பயிற்சி பெறுமாறும் அவர் எனக்கு அடிக்கடி சொல்லி வருவர். அவ்வாறே யான் பெரியபுராணத்தில் சிறுதேர் உருட்டியும், சிற்றில் கட்டியும் விளையாடி வந்தேன். அவ்வப்போது அரும்பதங்கட்கு உரை குறித்துக் கொள்வதுண்டு. நாயன்மார் வரலாறுகளை உரை நடையில் எழுதுவதுமுண்டு.கதிரைவேற் பிள்ளை சென்னை விடுத்து, நீலகிரிக்கேகித் தமிழ்த்தொண்டு செய்தபோது சிவனடி சேர்ந்தனர். தமிழிலுள்ள பேரிலக்கிய இலக்கணங்களையும், ஞான நூல்களையும் முறையாகப் பயிலுதல் வேண்டுமென்ற அவா என்னைப் பிடர் பிடித்து உந்தியே நின்றது. அவ்வவாவைத் தணித்துக்கொள்ள யான், மயிலை - மகாவித்துவான் - தணிகாசல முதலியாரை அடைந்தேன்.